கணினி – அறிமுகம் :
பரந்து விரிந்து கிடக்கும் இந்த பூமியை ஒரு புள்ளியில் இணைப்பது என்பது எளிதானதா? எளிதெனில், அதனை நிறைவேற்ற இயலுமா? இவ்விரு வினாவுக்கும் விடை ஒன்றே.
அது கணினி கணினியின் உதவியுடன், உலகின் எந்த மூலையிலிருந்தும் நம் செயல்களை எளிதாக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.
அவ்வாறு பரவலாகப் பயன்படுத்தப்படும் கணினியின் தேவையை நாம் அறிந்திருப்போம். எனினும், அக்கணினி எப்படி இயங்குகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா!
பொதுவாகவே. கணினியில் மிகமுக்கியமான மூன்று பாகங்கள் உள்ளன. அம்மூன்று பாகங்களையும் ஒன்றாக இணைக்கும்போதுதான், கணினியை நம்மால் முழுமையாக இயக்க முடியும்.
அம்மூன்று பாகங்கள் எவை எவை? அவற்றை எவ்வாறு இணைக்க வேண்டும்? என்பதைப் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.
கணினியின் பாகங்கள் :
- உள்ளீட்டகம் ( Input Unit )
- மைய செயலகம் ( CPU )
- வெளியீட்டகம் ( Output Unit )
உள்ளீட்டகம் ( Input Unit )
கணினிச் செயலாக்கத்துக்குத் தரவுகளையும் கட்டளைகளையும் உள்ளீடு உள்ளீட்டகம் (inputUnit).
அவ்வாறு தரவுகளை உள்ளீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையே உள்ளீட்டுக்கருவிகள் என்றழைக்கின்றோம்.
விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), வருடி (Scanner), பட்டைக் குறியீடு படிப்பான் (Barcode reader), ஒலிவாங்கி (Microphone Mic.), இணையப் படக்கருவி (Web Camera), ஒளி பேனா (Light Pen) போன்றவைதான் உள்ளீட்டுக்கருவிகள்.
மேற்காணும் உள்ளீட்டுக் கருவிகளில் விசைப்பலகையும், சுட்டியும் மிக முக்கியமானவை. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.
விசைப்பலகை :
முதலில் விசைப்பலகையை பற்றி தெரிந்து கொள்வோம். நாம் பயன்படுத்தும் எல்லா வகை கணினிகளிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெறுவது விசைப்பலகை.
ஏனெனில் எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்னும் கூற்று மொழிக்கு மட்டுமின்றி கணினிக்கும் பொருந்துவதாகும் அப்படிப்பட்ட எண்ணையும் எழுத்தையும் கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசை பலகையை ஆதாரமாகும்.
அந்த விசைப்பலகையில் இரண்டு விதமான விசைகள் (பொத்தான்கள்) உள்ளன. எண்களைக் கொண்ட விசைகளை என் விசை என்றும், எழுத்துக்களை கொண்ட விசைகளை எழுத்து விசை என்றும் வழங்குவர்.
